Friday, June 25, 2010

அத்தை மகள்


துயில் கலைந்து எழுந்து குளிக்கக் கிளம்பும் உன்னைத் தடுப்பதே, ஒவ்வொரு காலையும் அழகான போராட்டமாகிப் போகிறது எனக்கு.


குளித்து சுத்தமாகத்தான் அடுப்பைப் பற்றவைக்க வேண்டும் என்று உன் அம்மா சொல்லி அனுப்பியதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு… எழுந்தவுடன் குளித்தே ஆகவேண்டும் என்று ஏன் அடம்பிடிக்கிறாய் நீ.



ஒவ்வொரு நாளும் நீ தூங்கி எழும்போதெல்லாம்… நீ தூக்கக் கலக்கத்திலிருந்து மீண்டு வருகிற அந்த அழகான தருணங்கள்… பிறந்த குழந்தை தவழ்ந்து, எழுந்து, நடக்கிற பருவங்களாய் இருக்கிறதடி எனக்கு. நீ உடனே குளிக்கப் போய்விட்டால்… அந்த அழகு எல்லாம் தண்ணீரில் கரைந்து போய் விடாதா?



தூங்கி எழுந்த உன் முகத்தைச் சுற்றி இது புதிய முகமோ? என்கிற ஆச்சரியத்தோடு பறக்கும் உன் முடிகளின் அழகைப் பாரேன்… நீ குளித்து விட்டால் அந்த முடிகளின் சிறகுகள் எல்லாம் ஈரமாகி, பறக்க முடியாமல் தவிக்காதா?



குளித்து முடித்து ஈரம் அப்பிய உடையுடன் நீ இந்த வீட்டில் வளைய வருவது கொள்ளை அழகுதான் என்றாலும் அது வேறு அழகடி. அதற்காக இந்த இரவு அலங்கரித்து அனுப்பிய உன் அழகை ஒரு அரை மணி நேரமாவது நான் ரசிக்கவில்லை என்றால்.. சொர்க்கத்தில் இருக்கும் லைலாக்களும் மஜ்னுக்களும், அனார்கலிகளும் சலீம்களும் என்னைத் திட்டுவார்களடி! அய்யோ… இவனுக்குக் காதலிக்கத் தெரியவில்லையே! என்று தங்கள் தலைகளில் அடித்துக்கொண்டு கூடி வருந்துவார்களடி!

போதும்… போதும். கசங்கிய இந்தச் சேலையை மாற்றிக்கொள்ளவாவது விடுங்களேன் என்று திருவாய் மலர்ந்தாய்.

??அய்யோ… இது கசங்கலா? உன் சேலைக்கு இரவு போட்டு விட்ட இஸ்திரியடி!?? என்றேன்.

ஆ… எனக்கு மயக்கம் வருது என்று சிணுங்கினாய்.

உன்னை மயக்க தினமும் இப்படி அரை மணிநேரம் போராட வேண்டி இருக்கிறது எனக்கு. ஆனால் நீயோ தூங்கி எழுந்து முறிக்கும் ஒரு அழகுச் சோம்பலில் என்னை மயக்கி விடுகிறாயே வெறும் அரை நொடியில்.



?இந்த மயக்கம் எல்லாம் எத்தனை நாளைக்கு. ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்தானே! என்றாய்.

அடிப்பாவி.. இது ஆசையா… மோகமா… அதையும் தாண்டி காதலடி! அய்யோ லைலாக்களே… கொஞ்சம் இறங்கி வந்து, காதல் என்பது காலத்தை வென்றது என்பதை இவளுக்குச் சொல்லுங்களேன்.



உன் பிறந்த நாளைப் பார்த்து

மற்ற நாட்கள்

புலம்பிக் கொண்டிருக்கின்றன…

பிறந்திருந்தால்

உன் பிறந்த நாளாய்

பிறந்திருக்க வேண்டும் என்று.



ஊரிலேயே

நான்தான் நன்றாக

பம்பரம் விடுபவன்

ஆனால் நீயோ

என்னையே பம்பரமாக்கிவிடுகிறாய்.



நீ இல்லாத நேரத்திலும்

உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது

உன் அழகு.



கோடை விடுமுறை வந்தால்

குளிர்ப் பிரதேசம் தேடி

ஓடுவதில்லை நான்.

ஆனால்

ஒவ்வொரு கோடை

விடுமுறையிலும்

என்னையே தேடி ஓடிவருகிறது

ஒரு குளிர்ப் பிரதேசம்.

அதற்குப் பெயர்

அத்தை மகள்.







--

தெரியாதவரை அது இரகசியம்-புதிர்.



தெரிந்துகொண்டபின் அது செய்தி-வழி.



தெரிந்ததை அனுபவமாக்கினால் அதுவே அனுபவம்-ஞானம்

No comments:

Post a Comment

http://storiesparama.blogspot.com;
http://alturl.com/sgkj
http://silapathiharam.blogspot.com
http://parameshwari-wwwbestrealstories.blogspot.com
pls visit above sites and write your comments.