Friday, June 25, 2010

வெற்றிகள் அனைத்தும் அம்மா, மனைவிக்கே...!'

"வெற்றிகள் அனைத்தும் அம்மா, மனைவிக்கே...!' மேய்ச்சல் நிலத்தில் இருந்து இசைக் கல்லூரி வந்த வேல்முருகன்: எனக்கு விருத்தாசலம் பக்கம், முதனை என்ற சின்ன கிராமம் தான் சொந்த ஊர். அப்பா தனசேகர் விவசாயக் கூலி; அம்மாவிற்கு நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கூலி வேலை. பத்தரை மணி பஸ்சின் சத்தம் கேட்டால், மாடுகளை வயக்காட்டுக்கு ஓட்டிச் செல்வதும், மூன்றரை மணி பஸ் திரும்பும் போது, மாடுகளை வீட்டுக்கு ஓட்டி வருவதும் என் தினசரி வாழ்க்கை. மாடுகள் மேய, மரக் கிளைகளில் அமர்ந்து பாட்டுக் கச்சேரி நடத்துவோம்.அப்பா, என் இசை ஆர்வத்தை உற்சாகப்படுத்துவார். கிராமிய பாட்டு கேசட்கள் வாங்கி, "டேப் ரெக்கார்டரில்' போட்டுக் கேட்பேன். பாடல் ஒலிக்கும் போது, நானும் கூடவே பாடுவேன். இசைக்கு தக்க ராகத்துடன் பாட, அதுதான் பயிற்சி. ஊரில் எங்கு இழவு வீடு என்றாலும் முதல் ஆளாக நிற்பேன். ஒப்பாரிப் பாடல்கள் கேட்பதில் அத்தனை ஆர்வம். குடுகுடுப்பைக்காரர்கள் பாடும் விநோத பாட்டில் மயங்கி, அவர்களுடனேயே பல மைல் தூரம் போயிருக்கிறேன்.கம்ப்யூட்டர் கிளாஸ் போன இடத்தில், ரவிராஜா இன்னிசைக் குழுவின் அறிமுகம் கிடைத்தது. கிராமத்து விழாக்களில் பாட தொடங்கினேன். இந்தச் சமயத்தில் அம்மா சிறுநீரகப் பாதிப்பால் இறந்து போனார். நண்பர்கள், "சென்னைக்கு போ' என, உசுப்பேற்றி விட, சென்னைக்கு வந்து, இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது, அப்பா இறந்து போனார். வாழ்வில் நான் தனி மரமாக உணர்ந்த வேளையில், எனக்காக வந்தவள் தான் மனைவி கலா.அதே இசைக் கல்லூரியில் பரத நாட்டியம் படித்த கலாவுக்கு, என் குரல்வளம் பிடித்து போக, காதல் திருமணம் செய்து கொண்டோம். தாலி கட்டி முடித்தவுடன் நான் கிராமியப் பாடல்கள் பாட, அதற்கு கலா பரத நாட்டியம் ஆட என, வித்தியாசத் திருமணம் எனப் பத்திரிகைகள் எழுதின.விஜய், "டிவி'யில் கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான், "கடலை கொல்ல ஓரத்திலே' என்ற பாடலைப் பாட, அதை கேட்ட ஜேம்ஸ் வசந்தன் அழைத்து கொடுத்த வாய்ப்பு தான், "மதுர குலுங்க குலுங்க' பாடல் வாய்ப்பு. பின் நிறைய வா#ப்புகள் கிடைத்தன. என் அத்தனை வெற்றிகளும் என் அம்மாவுக்கும், மனைவி கலாவுக்கும் சமர்ப்பணம்.

No comments:

Post a Comment

http://storiesparama.blogspot.com;
http://alturl.com/sgkj
http://silapathiharam.blogspot.com
http://parameshwari-wwwbestrealstories.blogspot.com
pls visit above sites and write your comments.